search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டியில் மழை"

    ஊட்டியில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்று வீசியதில் மரம் விழுந்து மாணவர் ஒருவர் பலியானார்.
    வால்பாறை:

    ஊட்டியில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்

    ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அரசு பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் இமான் அகஸ்டின் (18). கோத்தகிரியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.காம். (சி.ஏ.)முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை என்பதால் நேற்று வீட்டுக்கு வந்து இருந்தார்.

    மாணவர் இமான் அகஸ்டின் ஊட்டி பிங்கர் போஸ்ட் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியது. அந்த சமயத்தில் ரோடு ஓரம் இருந்த ராட்சத கற்பூரம் மரம் திடீரென மாணவர் இமான் அகஸ்டின் மீது விழுந்தது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் பஸ் நிறுத்தத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மஞ்சூர் சாலையில் ஜார்க்கண்ட் மாநில வாலிபர், பந்தலூரில் தாய்-மகள், நேற்று ஊட்டியில் கல்லூரி மாணவர் என 4 பேர் பலியான சம்பவம் நடைபெற்று உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான உத்தரவை கலெக்டர் இன்சென்ட் திவ்யா பிறப்பித்துள்ளார். பலத்த மழை காரணமாக கூடலூர் ஏழுமுறம் ஆற்றின் கரையோரம் தடுப்பு சுவர் இடிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. குன்னூர் அருகே உள்ள வெலிங்டன்- அருவங்காடு ரெயில் நிலையங்களுக்கு இடையே ராட்சத மரம் தண்டவாளத்தில் விழுந்தது.

    இதனால் மலை ரெயில் நடுவழியில் நின்றது. தண்டவாளத்தில் விழுந்த மரத்தை ரெயில்வே ஊழியர்கள் அகற்றினார்கள். இதனால் மலை ரெயில் 20 நிமிடம் தாமதமாக சென்றது.

    ஊட்டியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து உள்ளது.

    ×